காவேரி சூழ் பொழில், சோலைகள் நடுவினில் கருமணியாக, கிடந்த கோலத்தில், அரங்கநாதப் பெருமாள் தன் பேரருளை வாரி வழங்கும் இடம் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், 12 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த காலம் தொடங்கி இன்றுவரை எல்லா நாட்களிலும் அடியார்கள் பலரும் வந்தவண்ணம் இருக்கும் அற்புத திருத்தலம் இது. இத்திருத்தலத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் முறையாக திட்டமிட்டு வழங்கியவர் உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜர். இக்கோவில் பற்றிய முறையான வரலாறு, கோவில் மரபுகள், கோவிலின் ஒழுகலாறுகள், கோவில் குறித்த கல்வெட்டுகள் ஆகியன இன்னும் முறையாக ஆய்வுசெய்து வெளிக் கொணரப்படவில்லை. திருவரங்கம் கோவிலை "பெரிய கோவில்' என்றும் வைணவ உலகின் "கோவில்' என்றும் குறிக்கப்படும். இக்கோவிலின் அமைப்பு முறை, இக்கோவிலுடன் தொடர்புடைய திருவிழாக்கள், பண்டிகைகள், சமூகம் சார் செயல்பாடுகள் என அனைத்தும் மிக சுவை நிறைந்த செய்திகள். திருவரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதலிடம் வகிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இத்திருக்கோவிலில் திருச்சுற்று களில் அமைந்துள்ள சுற்றுக் கோவில்கள், மண்டபங்கள் மாளிகைகள், மடங்கள் ஆகிய அனைத்துமே அரிதான பல சுவையான செய்திகளை உள்ளடக்கியவை. சாதி, மத பேதங்களை களைந்து, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து அடியவர்களாக ஆக்கிக்கொண்ட பெருமை அரங்கனுக்கு உண்டு. ஓராண்டின் அனைத்து மாதங் களிலும் ஒவ்வொரு திருப்பெயரைத் தாங்கி இங்கு உற்சவம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இத்திருக்கோவிலுக்கு அரங்கனை வழிபடுவதற்காக வருபவர்கள், தெய்வ இயல்புகள், கோவில் சிறப்புகள், விழா சிறப்புகள் அவற்றுக்குள் அடங்கியிருக்கும் தத்துவம், மேம்பாடுகள் ஆகியவற்றையும் உணரவேண்டியது இன்றியமையாதது.
இத்தகைய அருங்கருத்துக்களை இத்தொடர் கட்டுரையின் வழியாக மெய்யன்பர்கள் அறிந்துகொள்ளலாம்.
----------------
பரம்பொருள் ஆகிய சர்வேஸ்வரன் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் ஆகிய வடிவங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருளை வழங்குகின்றான். இதில் பரம், வியூகம் ஆகிய இரண்டையும் நாம் மண்ணுலகத்தில் இருந்துகொண்டு காணமுடியாது. இந்த உடலோடும், பிறவியோடும் அதனை அனுபவிக்க இயலாது. விபவம் என்பது திருமால் எடுத்த அவதாரங்களைக் குறிக்கும். இந்த அவதாரங்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை. எனவே அந்த அனுபவத்தையும் நாம் பெற இயலாது.
தவம், யோகம் இவற்றை முறையாக செய்பவர்களுக்கே இறைவனுடைய அந்தர் யாமி என்ற வடிவத்தை காணும் வாய்ப்பு உண்டு. ஆகவே அவனை அணுக நம்முடைய முன்னோர்கள் கடும் தவமும் நீண்ட யோகமும் செய்தார்கள். இவையும் இன்றைக்கு நமக்கு சாத்தியம் இல்லை.
அப்படியென்றால், இறைவனை இக்காலத்தில் காண இயலாதா என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். நம்மைப் போன்றவர்களுக்காகவே எம்பெருமான் அர்ச்சாவதாரத்தில் காட்சி தந்து நமக்கு அருளை பொழிகின்றார். இதற்காக நாம் உடலை வருத்தி தவம் கிடக்க வேண்டாம், ஊசி முனையில் தவம் செய்ய வேண்டாம், நெருப்பாற்றைக் கடக்கவேண்டாம், ஊனையும், உணவையும் குறைத்துக்கொண்டு உடலை சுக்குபோல் ஆக்க வேண்டாம். நீர் இல்லாவிட்டால் மீன் வாழாது என்பதுபோல நம்முடைய மனதில் திடமான இறை நம்பிக்கை இருந்தால் போதும், எம்பெருமான் அருள் தானே நமக்கு கிட்டும். இத்தகைய வழியை நமக்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து காட்டி, வார்த்தைகளாகவும் நம் கைகளில் தந்துவிட்டு சென்றவர்கள்தான் ஆழ்வார் பெருமக்கள். அத்தகைய பன்னிரு ஆழ்வார்களாலும் பாடி பரவப்பெற்ற பெருவரம் திருவரங்கம் அரங்கநாதப் பெருமாள். அர்ச்சாவதாரம் என்பதற்கு, இறைவனை சிலை வடிவத்திலோ, மரத் திலோ, உலோகங்களிலோ திருவுருவமாக அமைத்து பக்தர்கள் வழிபடுவது என்று பொருள்.
சோழநாட்டில், காவிரி ஆற்றுக்கு நடுவில், சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில், மகாலட்சுமிகரமாய் கருதப்படுகின்றது இந்த ஸ்ரீரங்கம் என்னும் தலம். இத்தலத்தைக் கண்டுகளித்தவர்கள் நரகத்தை பார்க்கவேண்டியது இல்லை. எமலோகத்திற்குப் போகவேண்டியது இல்லை அவர்களை மரண வேதனை வருத்தாது. மறுபடியும் அவர்கள் இவ்வுலகில் பிறந்து துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்பது மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே வாழ்க்கையில் ஒருமுறையாவது ஸ்ரீரங்கத்திற்கு போகவேண்டும், அங்குள்ள காவிரி ஆற்றில் நீராடவேண்டும், ஸ்ரீரங்க விமானத்தை தரிசிக்க வேண்டும், ஸ்ரீரங்கநாதரை சேவை செய்யவேண்டும், தங்களால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு கொடை அளிக்கவேண்டும். என்பதையே தங்கள் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட மக்கள் இன்றும் உள்ளனர். தும்மும் போதும், நடக்கும்போதும், இருமும் போதும், கொட்டாவி விடும்போதும், எச்சில் உமிழும்போதும், உடம்பில் ஒரு நோய் நேரிட்டபோதும், பாவிகளோடு இணைந்து வாழவேண்டிய சூழலிலும், ஒரு பொய் சொல்லவேண்டிய கட்டாயத்திலும், பாவிகளுக்காக ஆதரவாக பேசும் பொழுதும், மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்கவும் ஒருமுறை "ரங்கா' என்று தியானிப்பதே சிறந்தது.
"ரங்கா ரங்கா' என்று மனமுருகி கூறுபவர்களுக்கு வினைகள் எல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல நீங்கும். அவர்கள் புண்ணியசாலிகளாக மாறுவார்கள். ஸ்ரீரங்கத்திற்கு செல்லமுடியாதவர்கள்கூட அத்தலம் இருக்கும் திசை நோக்கி, இரண்டு கைகளையும் தலைக்குமேல் கூப்பி அஞ்சலி செய்து, ரங்கா என்று தியானித்தால் அவன் அருள் நிச்சயம் கிட்டும். ஏகாதசி அன்று விரதமிருந்து, துளசி தீர்த்தம் அருந்தி, இரவு முழுவதும் ரங்கனுடைய கீர்த்தனைகளை பாராயணம் செய்கிறவர்களுக்கு பரம பாகவதர்கள் பெறுகிற புண்ணியமும் பெருமையும் கிடைக்கும். தேவலோகத்தில் இருக்கும் தேவர்கள்கூட ஸ்ரீரங்கத்திற்கு வந்து மனிதனாக பிறக்கவேண்டும் என்று எப்பொழுதும் எம்பெருமானை வேண்டிக்கொண்டே இருப்பார்களாம். புரட்டாசி மாதத்தில், கிருஷ்ணபட்சத்தில், திரயோதசியன்று இத்தலத்திற்குச் சென்று, பிதுர் தர்ப்பணம் செய்தால், செய்தவனுடைய வம்சத்தி லுள்ள அனைவரும் பாவ விமோசனம் பெற்று, பரமபதத்தை அடைகிறார்கள். மார்கழி மாதம் முழுவதும் காவிரியில் நீராடி, ஸ்ரீ ரங்கநாயகனை வணங்கி, பரமபாகவதர்களுக்கு தாசனாக இருந்து, அவர்களையும் சேவித்து, தொண்டுசெய்தால் கோடி புண்ணியம் வாய்க்கும் என்பது உண்மை.